Tuesday, June 4, 2019

4


வீட்டுத் தோட்டத்தைப் பொருத்தவரை ஆண்டு முழுவதும் காய்கறிகள் கிடைப்பதுபோல திட்டமிட்டு விதைக்க வேண்டும். ஒரு செடி மகசூல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, அதே ரக செடியை மற்றொரு தொட்டியில் நடவு செய்துவிட வேண்டும். அப்போதுதான், இந்தச் செடியில் மகசூல் முடிந்தவுடன், புதிதாக நடவு செய்த செடியில் மகசூல் கிடைக்கத் தொடங்கும். கீரைகள் 15 நாட்கள் முதல் அறுவடைக்கு வரும். கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பாகல், பீர்க்கன், புடல் போன்ற காய்கறிகள் 50 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு வரும். வெங்காயம் 70 நாளில் அறுவடையாகும். ஆக, அறுவடை நாட்களைக் கணக்கிட்டு செடிகளை நடவு செய்ய வேண்டும்.

      வீட்டுத் தோட்டத்தைப் பொருத்தவரை, கத்திரி, வெண்டைக்காய், மிளகாய், தக்காளி, கொத்தவரை போன்ற குத்து செடிகளையும், பாகல், புடல், பீர்க்கன் போன்ற கொடி வகைகளையும், தர்பூசணி, சுரை, பூசணி போன்ற தரையில் படரும் கொடி வகைகளையும் பயிரிடலாம். அத்துடன் கேரட், முள்ளங்கி, நூக்கல், காலிஃபிளவர், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற ஆங்கில காய்கறிகளையும் பயிர் செய்யலாம். கோடைக் காலத்தில், புடலங்காய், தர்ப்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும் மழைக்காலத்தில் அவரை, காராமணி, கொத்தவரங்காய் போன்றவற்றையும் குளிர்காலத்தில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட், கொடமிளகாய் போன்றவற்றையும் விதைக்கலாம். அத்துடன் அனைத்து கீரைகளையும் வளர்க்கலாம்.

முதன்முதலில் மாடித்தோட்டம் அமைப்பவர்கள், கீரைகளை பயிர் செய்து நடைமுறையில் தோன்றும் பிரச்னைகளை அனுபவபூர்வமாக தெரிந்துகொண்ட பிறகு, மற்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். அதிலும் சுலபமாக வளர்க்க ஏற்றது வெந்தயக்கீரை. தொட்டியின் அடிப்பகுதியில் துளையிடப்பட்ட, ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம், செம்மண் ஆகியவற்றை 2:2:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையை இட்டு நிரப்புங்கள். வீட்டு சமையலறையில் இருக்கும் வெந்தயம் 50 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். தொட்டியின் அளவைப் பொருத்து வெந்தயத்தை எடுத்துகொள்ளலாம்.

வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி வெள்ளை துணியில் கட்டி 8 மணி நேரம் வைத்தால் வெந்தயம் முளை கட்டும். தொட்டியின் மேல் மண்ணை லேசாக கீறி, முளை கட்டிய விதைகளை நெருக்கமாகத் தூவி, விதைகள் மறையும் அளவுக்கு லேசாக மண்ணை மூடி விடவேண்டும். தண்ணீரை ஊற்றக் கூடாது. தெளிக்க வேண்டும். பூவாளி இல்லாதவர்கள், வாட்டர் கேன் மூடியில் சிறு சிறு துளைகளை நெருக்கமாக இட்டு பூவாளியைப் போல பயன்படுத்தலாம். தண்ணீர் அதிகமாக இருந்தால் விதைகள் அழுகிவிடும். எனவே விதைகள் வளரத் தேவையான ஈரப்பதம் மட்டும் தொட்டியில் இருப்பதுப் போல பார்த்துகொண்டால் போதுமானது. தொட்டியில் நீர் தேங்கி நிற்பதோ.. அதிக ஈரமாகவோ இருக்கக் கூடாது. தொட்டிக்கு சூரிய ஒளி தேவை. அதற்காக நேரடியாக சூரியஒளி படும் இடத்தில் தொட்டியை வைக்கக் கூடாது. ஏழாவது நாள் தொட்டி முழுவதும் தளிர் முளைத்திருக்கும். தினமும் நீர் தெளித்து வந்தால் 25-ம் நாள் வெந்தயக்கீரை அறுவடைக்குத் தயாராகி இருக்கும். முப்பது நாட்கள் வரை விட்டு, கீரையை அறுவடை செய்யலாம்
.
வெந்தயக்கீரையைத் தொடர்ந்து, சமையலறையில் இருக்கும் புதினாவையும் சோதனை முறையில் பயிரிடலாம். புதினாவின் வேர் பகுதியில் உள்ள தண்டை வெட்டி எடுத்து, மண் நிரப்பி தயாராக உள்ள தொட்டியில் நடவு செய்து, தண்ணீர் தெளித்து வந்தால், தண்டு பகுதியில் சிம்படித்து கீரை வேகமாக வளரும். 25 நாட்களில் ரசாயனம் தெளிக்காத, இயற்கை முறையில் விளைந்த ‘ஃபிரஷ்’ புதினாவை அறுவடை செய்யலாம். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இந்த இரண்டு சோதனைகளை செய்து பார்த்து, அதில் தோன்றும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு, முழுமையான மாடித்தோட்ட விவசாயத்தில் இறங்கலாம்.

No comments:

Post a Comment