Tuesday, June 4, 2019

5

      மாடித் தோட்டத்தைப் பொருத்தவரை அனுபவம்தான் உங்களை முழுமையான விவசாயியாக மாற்றும். அந்த அனுபவங்களை, ஏற்கனவே மாடித் தோட்டம் அமைத்து வெற்றிகரமாக மகசூல் எடுத்துவரும் சிலர் உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறார்கள். சமீப நாட்களாக மாடித் தோட்டம் குறித்த பயிற்சிகளும், செய்திகளும் ஊடகங்களில் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.

                   இந்நிலையில் கோயம்புத்தூர் சரவணம்பட்டியைச் சேர்ந்த சிவராஜா, வீட்டுத் தோட்டத்தில் தனக்குக் கிடைக்கும் அனுபவங்களை தனது வலைப்பூவில் பதிவிட்டு வருகிறார். பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வலைப்பூ பக்கத்தைப் பற்றி பேசும் சிவராஜா, ‘‘நான் ஒரு மென்பொருள் பொறியாளர். நான் வளர்ந்தது எல்லாமே கிராமத்திலதான். அதனால விவசாயம் சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் இருந்துகிட்டே இருக்கும். சொந்த வீடு வாங்கி தோட்டம் அமைக்கணும்னு நினைச்சேன். சென்னையில் வசிக்கும்போது இடம் இல்லாததால அது முடியலை. பிறகு, கோயமுத்தூருக்கு வந்த பிறகு, தோட்டம் அமைக்கறதுக்காகவே காலி இடம் இருக்கற மாதிரி வீடா தேடி பிடிச்சு வாங்கினேன். நல்ல இடமா அமைஞ்சதால மரங்களும் வளர்க்க முடிவு பண்ணினேன். பெருசா கிளையடிக்கற மரமா இல்லாம, கொய்யா, நெல்லி, மா, எலுமிச்சை, சீதாப்பழம், தென்னை, சப்போட்டா, முருங்கைன்னு ரகத்துக்கு ஒன்னா எட்டு மரங்களை நட்டேன். வீட்டுத்தோட்டம் அமைக்கறதுக்கு முன்ன, அது தொடர்பா சில இடங்கள்ல பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

என் வீட்டுத் தோட்டத்தில் வெங்காயம்

                  ‘‘சின்ன வயதில் சமையல் அறையில் ஏதாவது வெங்காயம் முளைத்து கிடந்தால் எடுத்து வந்து நட்டு வளர்ப்போம். இங்கே வெங்காயத்திற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விதைகள் கிடைப்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. பிறகு கூகுளில் தேடிப் பார்த்தபோது, வெங்காயச் செடி நன்றாக வளர்ந்ததும் பூ பூக்கும் என்றும், அந்த பூ முற்றியதும் அதில் இருந்து விதை எடுக்கலாம் என்றும் விவரங்கள் கிடைத்தன.

                 சரி நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்று ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து நட்டேன். நன்றாக வளர்ந்ததும் ஒவ்வொரு இலை நுனியிலும் வெள்ளையாய் ஒரு மொட்டு வந்து, பூத்தது. பூ நன்றாக பெரிதானதும் உள்ளே சின்னதாய் கருப்பாய் (எள் மாதிரி) விதைகள் கிடைத்தது.

                                அந்த விதைகளையே ஒரு சோதனை முயற்சியாக ஒரு சிறிய இடத்தில் விதைத்தேன். மண்ணை லேசாக கிளறி விட்டு விதையைத் தூற்றி விட்டேன். ஒரு வாரத்தில் முளைத்துவிட்டது. புல் மாதிரிதான் வளர்ந்து கிடந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட வெங்காயம் பெரிதாகவே வந்திருக்கிறது.
 
                                 செடி முற்றி லேசாக பழுப்பு நிறம் கொடுத்து வாட துவங்கும்போது அறுவடை செய்தேன். நன்றாக திரட்சியான சின்ன வெங்காயம், செடிக்கு ஒன்றாய் காய்த்திருந்தது. சின்ன வெங்காயத்தை வாங்கி நாம் அப்படியே விதைத்தும் நடவுசெய்யலாம்.

 காலிஃபிளவர்..!
                      காலிஃபிளவர், வெஜ் மக்களுக்கு காய்கறியில் ஒரு சிக்கன் மாதிரிதான். தந்தூரி காலிஃபிளவர், சில்லி காலிஃபிளவர் குழந்தைகளுக்குப் பிடித்த ஒன்று. முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. விதை, செடி எல்லாமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. காலிஃபிளவர் ஒரு குளிர் பிரதேச காய்கறி. சிலர் இங்கு நன்றாக வராது, பூச்சி தாக்குதல் நிறைய இருக்கும் என்றார்கள்.

         இருந்தாலும் இந்த ஜூலையில் நாற்று விட்டு எடுத்து நட்டு விட்டேன். ஒரு அடி இடைவெளியில் மொத்தம் 12 செடிகள் நட்டேன். கோஸ் வந்ததைவிட செடி ரொம்ப செழிப்பாக வந்தது. கொஞ்சம் முன் எச்சரிக்கையாக ஒரு தடவை கொஞ்சம் மஞ்சள் கரைசலையும், ஒரு தடவை பஞ்சகவ்யாவும் தெளித்துவிட்டேன்.
        விதைத்து இரண்டாவது மாதத்தில் பூக்க ஆரம்பித்தது. சில செடிகள் ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது. சில கொஞ்சம் சுருண்டு போய்விட்டது. சில செடிகளில் பூ ரொம்ப குட்டியாக வந்தது. மற்ற செடிகளில் பூ ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது. வெயில் பூவின்மேல் அதிகம் விழாமல் இருக்க செடியின் இலையை மடக்கி குடைபோல ஒரு கிளிப் வைத்து மாட்டி விட்டேன். இந்த அடைமழைக்கு கொஞ்சம் முன்னதாக தப்பிக்கொண்டது. விதைத்து மூன்றாவது மாதம் (அக்டோபர்) அறுவடை செய்தாகி விட்டது. பூ ரொம்ப திரட்சியாகவும் ருசியாகவும் இருந்தது. கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்தால் இன்னும் நன்றாகவே பலன்கொடுக்கும் என நினைக்கிறேன்.


  கத்தரி செடி நாற்று எடுத்து நடலாம். கத்தரி செடி கிட்டத்தட்ட ஒரு சிறிய மரம் அளவுக்கு வளரும். அதனால் ஒரு செடிக்கு மூன்று அடி இடைவெளி தேவைப்படுகிறது. ஒரு செடி மூன்று மாதம் வரை காய் கொடுக்கும். ஒரு செடியில் இருந்து மொத்தம் 5 கிலோ வரை கிடைக்கும். நிறைய இடைவெளிவிட்டு நடுவதால் சில நேரம் ஊடு பயிராக கீரையும் போடுவதுண்டு. கத்தரி செடி வளரும் போது நாம் கீரையும் பறித்துக் கொள்ளலாம்.


சமவெளியிலும் வளரும் கேரட்!


           இங்கே கோவையில் சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் தோட்டம் அமைத்திருக்கிறார். அங்கே ஒரு தடவை கேரட் நிறைய விளைந்திருந்தது. கேரட் என்றாலே ஊட்டி மாதிரி மலைப்பிரதேசங்களில் மட்டும் வரும் என்று நினைத்த எனக்கு இங்கேயே அதுவும் இரண்டாவது மாடி வெயிலில் வந்திருப்பதைப் பார்த்து ரொம்ப ஆச்சரியம். பிடுங்கி சாப்பிட்டு பார்த்தபோது நன்றாக இருந்ததது


செடியைப் பற்றி விசாரித்தபோது கேரட்டுக்கும் விதைகள் கிடைக்கும் என்று தெரிந்தது. போன ஜூனில் இங்கே அக்ரி இன்டெக்ஸ் போனபோது கேரட் விதைகள் கிடைத்தது. விதைகள் சீரகம்போல இருக்கிறது. கேரட் செடியை அப்படியே விட்டு விட்டால் பூக்குமாம் (சில வருடங்கள் எடுக்கும் போல). அதில் இருந்துதான் விதை எடுக்கிறார்கள். மலைப்பிரதேச செடி என்பதால் கொஞ்சம் உயரமான படுக்கை போல ஒரு பாத்தி எடுத்துக் கொண்டேன் (செங்கலை செங்குத்தாக வைத்து அமைக்கலாம்). இதனால் நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கலாம். ரொம்ப வெயிலை தவிர்க்க கொஞ்சம் வெயிலும் நிழலுமான இடம் இருப்பதும் நல்லது. லேசாக கிளறி விதைகளை தூவிவிட்டேன். ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்துவிட்டது. 

கிழங்கு வகைகள்

               வளர்ப்பதில் ஒரு பிரச்னை, மண்ணுக்குள் என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியாது. கிழங்கு வைக்கிறதா இல்லையா... ஏதும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்கிறதா இல்லையா... என்று சில செடிகளை அவ்வப்போது கிளறி தெரிந்துகொள்ளலாம். டிசம்பரில் அறுவடை செய்தபோது எதிர்பார்த்ததைவிட நல்ல விளைச்சல். கேரட்டும் நல்ல திரட்சியாக வந்திருந்தது. கொஞ்சம்தான் அறுவடை செய்திருக்கிறேன். இன்னும் நிறைய செடிகள் பறிக்காமல் நிற்கிறது. நிறைய செடிகள் ரொம்ப நெருக்கமாக போய்விட்டது. நாற்று எடுத்து சரியான இடைவெளி விட்டு நட்டிருக்கலாம். மண்ணை நிறைய மணல், இலை கழிவுகள் கொண்டு இன்னும் கொஞ்சம் தளர்வாக தயார் செய்திருக்கலாம்.

கேரட் அறுவடை செய்ய கிட்டத்தட்ட ஆறு மாதம் பிடிக்கிறது. தக்காளி, வெண்டை மாதிரி வீட்டு உபயோகத்திற்கு என்று பயிரிட்டு விளைச்சல் எடுப்பது கடினம்தான். ஆனால் ஆசைக்காக ஒரு ஓரமாக கொஞ்சமாக போட்டு வைக்கலாம்..

No comments:

Post a Comment